“வாராவாரம் உங்கள் கதை/கட்டுரை வெளியாகவேண்டுமென்றால் நீங்கள் நாள்தோறும் எழுதவேண்டும்” என்று தன் கணவர் பாமா கோபாலன் தனக்கு அறிவுரை சொன்னதாக வேதா கோபாலன் எழுதியிருக்கிறார். என்ன அழகான, தெளிவான வழிகாட்டல்!
எழுதுகிறவர்களுக்கு என்றில்லை, எல்லாத் துறைகளிலும் அவரவர் நாள்தோறும் செய்கிற சிறு பழக்கங்கள்தான் பேராளுமைகளை உருவாக்குகின்றன.
பலருக்கு இதைக் கேட்டால் நம்பமுடியாது. ‘இவ்வளவுதானா? வேறு ஏதாவது வெற்றி ரகசியம் இருக்கும், இவர் வேண்டுமென்றே நம்மிடம் மறைக்கிறார்’ என்பார்கள். ஆனால் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதுதான் கட்டாய வெற்றியைத் தரக்கூடிய உண்மையான ரகசியம்.
சிலர் அம்மியை ஒரே அடியில் நகர்த்தும் உத்தி அறிந்தவர்களாக, பெரும் வலிமை கொண்டவர்களாக இருக்கலாம். அது வாய்க்காத பலருக்குத் தொடர்ந்து அடிக்கப் பழகுவது நல்ல தொடக்கம்.
எல்லாருக்கும் அடிக்கத் தெரியும். ஆனால், பெரும்பாலானோர் நான்கைந்து முறை செல்லமாக அடித்துவிட்டு, ‘ச்சே, இந்த அம்மி நகரவில்லை’ என்று எரிச்சலுற்று விலகிவிடுகிறார்கள். நாள்தோறும் எழுதத் தயங்குபவர்கள் அடிக்கடி அச்சில் (அல்லது டிஜிட்டலில்) தன் பெயரைப் பார்க்கும் மகிழ்ச்சிக்குமட்டும் ஆசைப்பட்டால் எப்படி?
இன்னொரு விஷயம், நாள்தோறும் எழுதுபவை வாரந்தோறும் வெளியாகும் என்றால் ஏழெட்டுப் படைப்புகளில் ஒன்றிரண்டுதான் வெளியாகும், நிறைய நிராகரிக்கப்படும் என்று பொருள். அந்த நிராகரிப்புகளில் மனம் சோரக்கூட நேரம் இல்லாதபடி தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தால் வலி தெரியாது.
ஆனால், நேற்று எழுதியதைப்போலவே இன்றைக்கும் எழுதிக்கொண்டிருந்தால் பல ஆண்டுகளுக்குப்பிறகும் நம் தரம் மேம்படாது, பலன் கிடைக்காது. ஒப்பிட்டுப் பார்த்தல், பிழை அறிதல், திருத்திக்கொள்ளுதல், கற்றல், வெவ்வேறு விதங்களில் முயலுதல் ஆகியவை அன்றாட எழுத்துப் பயிற்சியின் பகுதிகள். இந்த முனைப்பான தொடர் பயிற்சிதான் நிராகரிப்புச் சதவிகிதத்தைக் குறைத்து நம்மை மேம்படுத்தும்.
நிறைய எழுதுகிறவர்கள் உருப்படியாக எழுதுகிறவர்களாக இருக்கமுடியாது என்று ஒரு மடத்தனமான நம்பிக்கை நம்மிடையில் உள்ளது. நிறைய எழுதினால்தான் கொஞ்சமாவது உருப்படியாக எழுதவரும் என்பது என் கட்சி.