பெங்களூரில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிற வேர்க்கடலைத் திருவிழாவுக்குச் (Kadalekai Parishe) சென்றுவந்தோம். பல ஊர்களைச் சேர்ந்த பலவிதமான வேர்க்கடலைகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கலாம் என்பதுதான் இந்தத் திருவிழாவின் நோக்கம். ஆனால் இப்போதெல்லாம் வேர்க்கடலைக் கடைகள் 20%தான், மீதி மிட்டாய், சிப்ஸ், தோடு, சங்கிலி, பழம், பொம்மை, பை, இன்ன பிற.
நான் இதைக் குறையாகச் சொல்லவில்லை. பெங்களூர் போன்ற பெருநகரத்தின் நடுவில் கிட்டத்தட்ட ஒரு கிராமத்துச் சந்தையைப் பார்ப்பதுபோல் மிக இனிமையான அனுபவம்தான் இது. அங்கிருந்த கலவையான ஒலிகள், மணங்கள், பலவிதமான மக்கள் என்று அனைத்தும் தனி அழகு. மகிழ்ச்சியாக ஓரிரு மணி நேரம் நடந்து திரும்பினோம்.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு Bull Temple கோயில் வளாகத்தில் சில சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். பெரும்பாலும் கிராமத்துக் காட்சிகள், கடலைக்காய் விற்பனை என்று விரிந்திருந்த அந்தச் சிறு கண்காட்சி அத்தனை அழகு, ஒவ்வொரு மனிதரையும் காட்சியையும் மிகச் சிறப்பாக, நேர்த்தியாக வடித்துள்ளார்கள். பகல் நேரத்தில் சென்றிருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம், நன்கு புகைப்படம் எடுத்திருக்கலாம், இங்குள்ள படங்களில் அந்த அழகு சரியாகப் பதிவாகவில்லை.
இயன்றால் ஒருமுறை நேரில் சென்று பாருங்கள், இச்சிலைகள் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது தெரியாது. இப்போது விட்டால் இனி அடுத்த கார்த்திகைதான்.
பின்குறிப்பு: நீங்களும் என்னைப்போல் வேர்க்கடலைப் பிரியர் என்றால், இங்கு கிளிக் செய்து என்னுடைய ‘கொஞ்சம் கடலை போடலாம்‘ என்ற கட்டுரையைப் படித்துவிடுங்கள், உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.