வீட்டுக்கு ஓர் உறவினர் வந்திருந்தார். அவர் ஏழெட்டு நாள் தங்குவதாகத் திட்டம்.
ஆனால் அவர் இங்கே வந்த மறுநாள், என் மனைவியும் மகள்களும் திடீரென வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை, தர்ம சங்கடம்.
நல்லவேளை, அந்த உறவினர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ‘உங்க வீட்டுக்காரரை நான் பார்த்துக்கறேன், போய்ட்டுவாங்க’ என்று சொல்லிவிட்டார்.
இப்போது எனக்குச் சங்கடம், விருந்தினராக வந்தவரை உபசரிக்காவிட்டாலும், வேலை வாங்குவதா? ‘உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நான் ஹோட்டல்ல சாப்டுக்கறேன்’ என்றேன்.
அவர் ஏற்கவில்லை, ‘இது ஒரு பெரிய சிரமமா? எப்படியும் எனக்கும் குழந்தைக்கும் சமைக்கப்போறேன், கூட கால் தம்ளர் அரிசி வெச்சா உங்களுக்கும் ஆச்சு, நோ ப்ராப்ளம்’ என்றார்.
வேறு வழியில்லை, இரண்டு நாளாக அவர் சமையல்தான், சொந்த வீட்டிலேயே கொஞ்சம் கூச்சம், தயக்கத்துடன் சாப்பிடவேண்டியதாகிவிட்டது.
இன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்தேன், ‘நாளை காலை பொங்கல் செய்யறதா இருக்கேன், உங்களுக்குப் பிடிக்குமா?’ என்றார்.
’எனக்கு நோ ப்ராப்ளம், கேவலமான அந்தச் சேமியா உப்புமாவைத்தவிர பாக்கி எல்லாம் சாப்பிடுவேன்’ என்றேன் பந்தாவாக.
’அச்சச்சோ, இன்னிக்கு சேமியா உப்புமாதானே செஞ்சுவெச்சிருக்கேன்?’ என்று அதிர்ந்தார். அப்போது நீங்கள் என் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும்.
அவசரப்பட்டு வார்த்தையை விட்டதற்குத் தண்டனை, கடந்த பத்து வருடங்களில் முதன்முறையாக சேமியா உப்புமா சாப்பிட்டுமுடித்தேன்.
அதைவிடக் கொடுமை, நாளை காலை என் மனைவி ஃபோனில் விழுந்து விழுந்து சிரிக்கப்போகிறார். அதை எப்படித் தாங்குவது?!
(04 ஏப்ரல் 2013)
1 Comment