நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு எதேச்சையாக அவருடைய மேலாளரைப்பற்றித் திரும்பியது.
‘அவர் ரொம்பக் கண்டிப்பான ஆளு’ என்றார் என் நண்பர், ‘அவர்கிட்ட எந்த யோசனையைச் சொன்னாலும் சரி, அதுல நாலு ஓட்டையைக் கண்டுபிடிச்சுக் கேள்வி கேட்டுக் கிழிச்சுத் தொங்கவிட்டுடுவாரு.’
‘அடடா, அது ரொம்பக் கஷ்டம்தான்!’
‘ஆமா. ஆனா, அப்படி ஓட்டைகளைக் கண்டுபிடிக்கவும் ஒருத்தர் வேணுமில்லையா?’ என்றார் என் நண்பர், ‘என் பாஸ்கிட்ட ஒரு நல்ல குணம் என்னன்னா, துளிகூட ஈவு, இரக்கமில்லாம நம்ம யோசனையைத்தான் கிழிப்பாரு, நம்மைக் கிழிக்கமாட்டாரு. ஏன் இப்படிக் கேவலமான யோசனையை என்கிட்ட கொண்டுவர்றேங்கற தொனி பேச்சுல கொஞ்சமும் இருக்காது. அவர் கிழிச்சுப்போட்ட யோசனையை எடுத்துப் பக்காவாச் சரிசெய்யறதுக்கு நம்மகிட்ட தெம்பும் ஊக்கமும் இருக்கறமாதிரி பார்த்துக்குவாரு.’
நண்பர் இதைப் போகிறபோக்கில் சொல்லிவிட்டார். ‘Punish the crime, not the criminal’ என்பதை அந்த மேலாளர் எத்தனை அழகாகச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று நான் இன்னும் வியந்துகொண்டிருக்கிறேன்.