‘புணர்ச்சி இலக்கணம் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா என்ன தப்பு?’ என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. அதன் முக்கியத்துவத்தை உரைநடையில் விளக்குவது சிரமம், ஒரு பாட்டு இருந்தால் சட்டென்று காண்பித்துவிடலாம்.
எடுத்துக்காட்டாக, ‘குழலூதுங் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா’ என்று ஒரு பாட்டு. எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா இசையில் வாலி எழுதக் கே. எஸ். சித்ரா பாடியிருப்பார். அதில் முதல் வரியைமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், அதை இப்படிப் பாடிப் பாருங்கள்:
குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா
இப்போது வேறுபாடு சட்டென்று புரியும். குழல் ஊதும் என்று பாடுவதும் குழலூதும் என்று பாடுவதும் ஒன்றில்லை. ஊதும் கண்ணன் என்று தனித்தனியாகச் சொல்லும் சொற்கள் ஊதுங் கண்ணன் என்று சேரும்போது செவியில் அப்படியோர் இனிமை சேர்ந்துகொள்கிறது. அது தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட செயற்கை இனிப்பு இல்லை, இயற்கையான கரும்புச் சாற்றின் சுவை.
தமிழ் இலக்கணம் இயற்கையானது, கேட்டல் சுவை அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாங்கொட்டையில் மாஞ்செடி விளையும், சிறுத்தைக்குட்டி விரைந்தோடிப் பாயும், மீன்குஞ்சு நீந்தும் என்பவையெல்லாம் திணிக்கப்பட்ட விதிகள் இல்லை, அவை அவற்றின் இயல்பு.
இங்கு ம் + க என்ற எழுத்துகள் சேரும்போது அது எப்படி ‘ங்க’ என்று மாறுகிறது என்கிற இலக்கண விதியை யாராவது விளக்கினால் நமக்குப் போரடிக்கும், ஆனால் ‘குழலூதுங் கண்ணன்’ என்று கேட்டால் காதில் தேன் பாயும், அதற்கு நமக்கு எந்த விதியும் தெரியவேண்டியதில்லை.
எழுதுகிறவர்கள் (பாட்டு விஷயத்தில் பாடுகிறவர்களும்) உள்ளுக்குள் இதைத்தான் மனத்தில் கொள்கிறார்கள். கேட்போர்/படிப்போர் செவியில்/கண்ணில் தேன் பாய்ச்சவேண்டும், அதைக் கண்டு நம் மனத்தில் தேன் ஊறவேண்டும். அதற்கு நல்ல இலக்கணம் ஓர் இன்றியமையாத கருவி. சரியாக எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் படிக்கும்போது, கேட்கும்போது மொழியின்மீது, மனிதர்கள்மீது, உலகத்தின்மீது நம்பிக்கையைப் பெருக்கவல்லது.
தொடர்புடைய நூல்கள்:
1. நல்ல தமிழில் எழுதுவோம்: எளிய முறையில் தமிழ் இலக்கணம் கற்க உதவும் மிகச் சிறந்த கையேடு