முப்பத்தாறு ரூபாய் எழுபத்திரண்டு பைசா

சில ஆண்டுகளுக்குமுன்னால், இந்தியாவில் ஒரு Credit Card Boom வந்தது. அநேகமாக எல்லா வங்கிகளும் வெவ்வேறு கிரெடிட் கார்ட்(கடன் அட்டை)களை விதவிதமான சலுகைகளுடன் வாரி வழங்கத் தொடங்கினார்கள். ஓசியில் கிடைக்கிற பினாயில்தானே என்று நானும் ஏழெட்டுக் கார்ட்களை வாங்கிப் போட்டேன். அவை வழங்கிய சலுகைகளை நன்கு பயன்படுத்திக்கொண்டேன்.

ஆனால், அந்தத் தொடக்கச் சலுகைகள் தீர்ந்தபிறகு, எல்லாக் கார்ட்களும் (கிட்டத்தட்ட) ஒன்றுதான். அத்தனைக் கார்ட்களை அடுக்கிவைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மாதாமாதம் அனைத்தையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, பில்லைப் பார்த்து நேரத்துக்குப் பணத்தைக் கட்டுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். கவனக்குறைவாக ஏதாவது ஒரு பில்லைக் கட்ட மறந்துவிட்டால் அபராதம், வட்டி என்று வீணான பணச்செலவு.

ஆகவே, என்னிடமிருந்த பல கிரெடிட் கார்ட்களை உடைத்துப்போட்டுவிட்டேன். இப்போது மூன்றே மூன்று கிரெடிட் கார்ட்களை வைத்துள்ளேன், அதிலும் முதன்மையாகப் பயன்படுத்துவது ஒன்றுதான், மற்ற இரண்டையும் ஆண்டுக்குச் சிலமுறை சில குறிப்பிட்ட தேவைகளுக்காகமட்டும் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இப்படி நான் உடைத்துப்போட்ட கிரெடிட் கார்ட்களில் ஒன்று, கோடக் மகிந்திரா வங்கியுடையது. என்னுடைய நன்னேரம், அந்தக் கார்டை நான் உடைத்தெறிந்த மாதத்தில் அவர்கள் ஏதோ ஒரு சலுகையை அறிவித்தார்கள், அதன்கீழ் எனக்கு முப்பத்தாறு ரூபாய் எழுபத்திரண்டு பைசா கிடைத்தது.

அதே நேரம், அந்தப் பணத்தை நான் நேரடியாக எடுத்துக்கொள்ள இயலாது. அந்தக் கார்டைப் பயன்படுத்தி முப்பத்தேழு ரூபாய்க்குமேல் ஏதாவது பொருள் வாங்கவேண்டும், பின்னர், அந்தத் தொகையிலிருந்து இந்த ரூ 36.72ஐக் கழித்துக்கொண்டு மீதித் தொகையை வங்கிக்குச் செலுத்தவேண்டும், அதுதான் நடைமுறை.

ஆனால் நானோ, இந்த விஷயமெல்லாம் தெரியாமல் கார்டை உடைத்துப்போட்டுவிட்டேன். வங்கியைத் தொடர்பு கொண்டு பேசினால் புதிய கார்டு ஒன்றை அனுப்பிவைப்பார்கள்தான். ஆனால், முப்பத்தாறு ரூபாய்க்காக இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டுமா என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

நான் சும்மா இருக்கலாம், கோடக் மகிந்திராவின் சாஃப்ட்வேர் சும்மா இருக்குமா? அன்று தொடங்கி இன்றுவரை மாதாமாதம் எனக்கு “மைனஸ் முப்பத்தாறு ரூபாய் எழுபத்திரண்டு பைசா” என்று பில் அனுப்பிக்கொண்டிருக்கிறது. கூடவே SMS நினைவூட்டலும் வந்துவிடுகிறது.

இதோ, பல ஆண்டுகளுக்குப்பிறகு இன்றைக்கும் அந்த SMS வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக நான் அந்தக் கார்டைப் பயன்படுத்தாதபோதிலும், எப்படியாவது என்னிடம் அந்தத் தொகையைச் சேர்ப்பித்துவிடவேண்டும் என்பதில் கோடக் நிறுவனம் காட்டும் ஆர்வம் திகைப்பளிக்கிறது. இன்று மாலை பெங்களூரில் பெய்த மழைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

About the author

என். சொக்கன்

View all posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *