நேற்று அலுவலக நண்பர் ஒருவருடன் ஏதோ பேசவேண்டியிருந்தது. காலை 11:45க்கு முயன்றேன், அவர் பிஸி. அவர் 2:15க்கு முயன்றார், நான் பிஸி, இப்படியே 4:45, 6:15 என்று மாறி மாறி பிஸியாகிக்கொண்டிருந்தோம்.
ஒருவழியாக, இரவு எட்டேமுக்காலுக்கு அவரைத் தொலைபேசியில் பிடித்துவிட்டேன். கால் மணி நேரம் விரிவாகப் பேசினார், நாங்கள் பேச நினைத்த விஷயத்தை விளக்கினார். நன்றி தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தேன். ‘மிகுந்த போராட்டத்துக்குப்பின் வெற்றி, வெற்றி’ என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்.
இன்று காலை, அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல், ‘Sorry Naga, நேற்று நீங்கள் கூப்பிட்டபோது நண்பர்களுடன் தண்ணியடித்துக்கொண்டிருந்தேன். ஆகவே, நான் என்ன பேசினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நீங்கள் கேட்ட தகவல்களைக் கீழே தந்துள்ளேன். நேற்று சொன்னதை மறந்து, இன்று சொன்னதைமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.’
இந்தக் குறிப்புக்குக் கீழே அவர் எழுதியிருந்த தகவல்களைப் படித்தேன். அவை பெருங்குழப்பமாக இருந்தன. இவற்றோடு ஒப்பிடும்போது நேற்று இரவு அவர் போதையில் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தன.
இதனால் அறியப்படும் நீதி, சிலர் போதையில்தான் நன்றாகச் சிந்திக்கிறார்கள்போல!
1 Comment