சில ஆண்டுகளுக்குமுன்னால், அலுவலக வேலை விஷயமாக அகமதாபாத் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு உணவை முடித்துவிட்டுச் சிறிது ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று சும்மா ஏதோ ஒரு திசையில் நடந்துகொண்டிருந்தேன்.
சற்றுத் தொலைவில், ‘Kochrab Ashram 2 கிலோமீட்டர்’ என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டதுபோலிருந்தது. ஆனால், சரியாக நினைவு வரவில்லை.
அகமதாபாதில் காந்தியின் சாபர்மதி ஆசிரமம் இருப்பது தெரியும். அதற்குமுன்னால் அவர் தொடங்கிய ஓர் ஆசிரமமும் இங்குதானே இருக்கிறது! ஒருவேளை அதுதான் இதுவோ?
சட்டென்று ஃபோனைப் பிரித்துக் கூகுளைக் கேட்டேன். என் ஊகம் சரிதான் என்று உறுதிப்படுத்தியது. சற்று மகிழ்ச்சியாகவும் சற்று நாணமாகவும் உணர்ந்தேன்.
மகிழ்ச்சி சரி, நாணம் எதற்கு?
நான் காந்தியைப்பற்றிப் படிக்கிறேன் பேர்வழி என்று அவர் எழுதியவற்றையும் பிறர் எழுதியவற்றையும் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்த நேரம் அது. சொல்லப்போனால் அந்த அகமதாபாத் வேலையை வலிய ஒப்புக்கொண்டு அங்கு வந்ததுகூட சாபர்மதி ஆசிரமத்தை நேரில் பார்க்கத்தான். ஆனால், அதற்குச் சற்றுத் தொலைவில் இருக்கிற, காந்தியின் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான இடமாகிய கோச்ரப் ஆசிரமத்தின் பெயர்கூட எனக்குச் சரியாக நினைவில்லை, அதனால்தான் நாணம், கொஞ்சம் குற்றவுணர்வும்கூட.
அப்போது இரவு நேரம் என்பதால் கோச்ரப் ஆசிரமம் பூட்டியிருந்தது. அதனால், மறுநாள் காலை மீண்டும் அதே சாலையில் நடந்து கோச்ரப் ஆசிரமத்துக்கு வந்தேன். அங்கிருந்த காட்சிப்பொருட்களைப் பொறுமையாகப் பார்த்தேன்.
அந்தக் காட்சிப்பொருட்களில் ஒன்று, காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு வலியுறுத்திய 14 கொள்கைகளைப் பட்டியலிட்டிருந்தது:
1. உண்மை
2. அகிம்சை/அன்பு
3. மனக் கட்டுப்பாடு
4. உணவுக் கட்டுப்பாடு
5. திருடாமலிருத்தல்
6. சொத்து சேர்க்காமல் இருத்தல்
7. அச்சமின்மை
8. தீண்டாமையை அகற்றுதல்
9. உழைத்து உண்ணுதல்
10. அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல்
11. பணிவு
12. உறுதிமொழிகள்
13. யாகம்/தியாகம்
14. சுதேசிக் கொள்கை
இந்தப் பட்டியலில் இருந்த அனைத்து அம்சங்களையும் நான் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்திருந்தேன். ஆனால், இவற்றை மொத்தமாக ஓரிடத்தில் பார்த்தது மகிழ்வளித்தது. காந்தி இந்தப் பட்டியலை எங்கு வழங்கியிருக்கிறார் என்று தேடினேன், ‘From Yervada Mandir’ என்ற நூலில் அவர் இவற்றை விரிவாக விளக்கியிருப்பதைத் தெரிந்துகொண்டேன்.
உண்மையில் அது ஒரு சிறு நூல்தான், சிறையில் எழுதப்பட்ட 16 கடிதங்களின் தொகுப்பு. வழக்கமான காந்தி பாணியில் எளிமையுடனும் தெளிவுடனும் அவர் தன்னுடைய தொண்டர்களுக்கு இந்த 14 கொள்கைகளை விளக்கியிருந்தார். நான் அவற்றை விரும்பிப் படித்தேன், பிறருக்கும் பரிந்துரைத்தேன்.
இந்த நேரத்தில், ‘பாசமலர்’ சிறுவர் இதழில் ஒரு புதிய தொடரை எழுதும் வாய்ப்பு அமைந்தது. ‘காந்தி வழி’ என்ற தலைப்பில் இந்த 14 கொள்கைகளை சற்று விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் எழுதலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
இது மொழிபெயர்ப்பு நூல் இல்லை. ஆனால், காந்தியின் கட்டமைப்பை முழுக்கப் பின்பற்றியிருக்கிறேன், ஒவ்வோர் அத்தியாயத்திலும் அவர் முன்வைத்திருக்கும் முதன்மை வாதங்களைக் கொண்டுவந்திருக்கிறேன், கூடுதல் எடுத்துக்காட்டுகள், அவை தொடர்பான என்னுடைய புரிந்துகொள்ளல்களைச் சேர்த்திருக்கிறேன். இந்நூலின் மிகைகள் காந்தியுடையவை, குறைகள் என்னுடையவை. இதை நான் பொய்ப்பணிவாக இல்லாமல் காந்தி பரிந்துரைக்கும் உண்மையான பணிவுடன் குறிப்பிடுகிறேன்.
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்கிற வியப்பை எனக்குள் நாளுக்கு நாள் மிகுதியாக்கிக்கொண்டிருப்பவர் காந்தி. அந்தப் பிரமிப்பின் ஒரு சிறு துளிதான் இந்த நூல்.
‘காந்தி வழி’யைத் தொடராக வெளியிட்ட ‘பாச மலர்’ இதழின் ஆசிரியர் போளி பய்யப்பிள்ளி அவர்களுக்கும், விரும்பிப் படித்து ஆதரவளித்த வாசகர்களுக்கும் என் நன்றி. இதைப் படித்து, பரிசளித்து, பகிர்ந்துகொள்ளப்போகும் உங்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.
(ஆகஸ்ட் 15 அன்று மின்னூலாக வெளியாகும் ‘காந்தி வழி’ நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது. ரூ 100 விலையுள்ள இந்த நூலை இப்போது ரூ 50க்கு முன்பதிவு செய்யலாம். அதற்கான இணைப்பு இங்கு உள்ளது. இந்நூலை அச்சு நூலாக வாங்க விரும்புவோர் இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்.)
1 Comment