‘மூன்றாம் பிறை‘ படத்தில் வரும் ‘பூங்காற்று புதிதானது‘ பாடலில் வரும் வரிகள் இவை:
நதி எங்கு செல்லும்?
கடல்தன்னைத் தேடி.
பொன்வண்டு ஓடும் மலர் தேடி.
என் வாழ்வில் நீ வந்தது விதியானால், (மலருக்கு வண்டுபோல், கடலுக்கு ஆறுபோல்)
நீ எந்தன் உயிர் அன்றோ!
ராஜாவின் 4 வரி, 20 சொல் சரணத்தில் விரிவாகக் கதை பேச இடமே இல்லை. ஆனாலும் அந்த நாயகனின் உள்ளக்கிடக்கையை எவ்வளவு ஆழமான வாதமாகக் கண்ணதாசன் உட்காரவைத்திருக்கிறார் பாருங்கள்! சொற்சிக்கனமும் கட்டுக்கோப்பும் மெட்டுக்கிணக்கமும் எவ்வளவு இனிமை!
இதே இயக்குநர், இசையமைப்பாளருடைய வேறொரு படத்தில் (சதி லீலாவதி) வேறொரு பாடலில் (மகராஜனோடு ராணி) இதே கடல், ஆறு உவமையை வாலி இப்படிப் பயன்படுத்தினார்:
கங்கைக்கொரு வங்கக் கடல்போல்
அவன் வந்தான்.
அந்தப் படத்தில் நாயகனுக்கு 2 நாயகிகள். கங்கைக்கு ஒரு வங்கக் கடல்தான், ஆனால் வங்கக் கடலில் பல ஆறுகள் கலக்கும்.
கண்ணதாசனின் பாட்டுத் தலைவனும் கடல்தான். ஆனால் ஒரே ஆற்றை உயிரெனக் கொள்ளும் கடல்!