ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய புத்தகம் ஒன்றைப்பற்றி அவர் ஏதோ சொன்னார். அதற்கு நான் இயல்பாகப் பதில் சொன்னேன். ‘என் சொற்கள் உங்களைக் காயப்படுத்திவிட்டன என்று நினைக்கிறேன்’ என்றார் அவர்.
உண்மையில் என்னுடைய எழுத்துபற்றிய விமர்சனங்கள் என்னைச் சில விநாடிகள் வருத்தப்படுத்தினாலும் எப்போதும் காயப்படுத்துவதில்லை (அலுவலகத்தில் என்னுடைய அலுவல்பற்றிய விமர்சனங்களும்தான்). சொல்லப்போனால் தேவையைவிடச் சற்றுக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்துதான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன், கவனிக்கிறேன், அவற்றில் உண்மையிருந்தால் சரிசெய்கிறேன், அதுதான் முறையும்கூட.
ஏனெனில், பாராட்டு என்பது மிக அற்பமான அளவுகோல். அதை யாரும் எப்போதும் எந்தத் தகுதியும் இன்றிக்கூட வீசிவிடலாம். எழுதியவருக்கு அது ஒரு கணம் மகிழ்ச்சியை, கிளுகிளுப்பைத் தருவதுடன் சரி. அதற்குமேல் அதனால் எந்தப் பயனும் இல்லை. அதிலிருந்துமட்டும் ஒருவன் தனக்கான செயலூக்கத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்றால் அது மிகப் பெரிய இழிவாக அல்லவா இருக்கும்!
அதோடு ஒப்பிடும்போது விமர்சனங்கள் உருப்படியானவை, பொருட்படுத்தக்கூடியவை. அவற்றில் உண்மை இருந்தால் அவை ஒரு தங்கச் சுரங்கத்துக்குச் சமமானவை, நமக்குப் பெரிய அளவில் உதவக்கூடியவை.
நம்மிடம் உள்ள போதாமைகளைப் பிறர் சுட்டிக்காட்டுமுன் நாம் உணர்ந்திருந்தால் நல்லது. அது இயலாவிட்டாலும், அவற்றைப் பிறர் சுட்டிக்காட்டியபிறகாவது உணரவேண்டும். நம் திறமைமீது நம்பிக்கை வேண்டும். ஆனால், “நான் உன்னதத்தின் உச்சமாக்கும்” என்று பிடிவாதம் பிடித்தால் நமக்குதான் இழப்பு.
நான் சொல்வதில் எந்தத் தன்னடக்கப் புண்ணாக்கும் இல்லை. நானும் எனக்கு வருகிற பாராட்டுக் கடிதங்களை ஃப்ரேம் செய்து வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து மகிழ்கிறவன்தான். ஆனால், அவையெல்லாம் வண்டி ஓட்டும்போது இதமாக வீசுகிற எதிர்க்காற்றைப்போன்றவை, வண்டிக்குப் பெட்ரோல் ஆகாது என்கிறேன்.