எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுக்கிடையிலான ராயல்டி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?
ஆங்கிலத்தில் தனி நபர் எழுத்தாளர்கள் நிறுவனமாக இயங்கும் பழக்கம் நெடுநாட்களாக உள்ளது. சென்ற வருடம் முதல் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர் ஒருவர்கூட “We got X Rupees Royalty” என்று பதிவு எழுதியிருந்ததைப் பார்த்தேன். ஆனால் தமிழில் அது எப்போதும் “எனக்கு ராயல்டி பாக்கி” என்பதாகதான் எழுதப்படுகிறது. அந்த “We”க்கும் “Me”க்கும் உள்ள வேறுபாடுதான் இந்தப் பிரச்சனையின் வேர்.
எழுத்தாளர் ஒரு நிறுவனமாக இயங்குவதில் என்ன நன்மை?
தெளிவான உரிமைகள், இயங்குமுறைகள், கடமைகளின் வரையறையுடன் முறையாக ஒப்பந்தம் செய்துகொள்ளல், அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களைச் சரியாகப் பின்பற்றும் ஒழுக்கம், பிரச்சனைகள் வந்தால் சட்டப்படி தீர்வு காணும் வாய்ப்பு ஆகியவையெல்லாம் இரு நிறுவனங்களுக்கிடையில்தான் சாத்தியம். தனிமனிதர்களுக்கிடையில் அல்லது ஒரு நிறுவனத்துக்கும் ஒரு தனிமனிதருக்கும் இடையில் அது நடக்கும்போது நிலைத்தன்மை (Consistency) இருக்காது, சம்பந்தப்பட்டவர்களுடைய தனிப்பட்ட ஒழுக்கத்தைப் பொறுத்து எல்லாம் ஏறி, இறங்கும், பிரச்சனைகள் வரும்.
ஆனால், தமிழில் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவது எளிதில்லை. இங்கு எழுதுவதை ஒரு தொழிலாகக் கருதுவது இழிவாக எண்ணப்படும்வரை இந்த நிலை மாறாது.
இவ்வளவு பேசுகிறாய், நீ ஏன் “Me”யிலிருந்து “We”க்குச் செல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அது சும்மா கீபோர்டில் ஓர் எழுத்தை மாற்றுகிற விஷயம் இல்லை. பெரும் செயல். ஒரு தொழில்முனைவோரைப்போல் சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்கான நேரமோ மனநிலையோ என்னிடம் இப்போது இல்லை. அவை கிடைக்கும்போது செய்வேன்.