1942ம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதற்காக வினோபா கைது செய்யப்படுகிறார். அவரை நாக்பூர் சிறையில் அடைக்கிறார்கள்.
ஆனால், அரசாங்கம் வினோபாவை ‘ஆபத்தான கைதி’ என்று வகைப்படுத்துகிறது. ஆகவே, அவரைத் தொலைதூரத்துக்கு அனுப்புகிறார்கள், அதாவது, தமிழ்நாட்டிலுள்ள வேலூர்ச் சிறைக்கு.
வேலூருக்கு வந்த வினோபாவிடம் சிறைச்சாலை அலுவலர் கேட்கிறார், ‘உங்களுக்கு நான் ஏதாவது சிறப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டுமா?’
‘ஆமாம்’ என்கிறார் வினோபா. ‘எனக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு ஓர் ஆசிரியருக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஏனெனில், இப்போது நான் தமிழர்களுக்கு நடுவில் வாழப்போகிறேன், தமிழ் உணவை உண்ணப்போகிறேன். ஆகவே, இந்த ஊர் மொழியைக் கற்றுக்கொள்வதுதான் முறை!’
அந்தச் சிறைவாசத்தின்போது வினோபா ஒன்றில்லை, இரண்டில்லை, தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என்று நான்கு தென்னாட்டு மொழிகளையும் கற்றுக்கொண்டார். ‘ஏன் இப்படி ஒரே நேரத்தில் நான்கு மொழிகளைக் கற்கிறீர்கள்?’ என்று யாரோ கேட்டபோது, ‘ஏனெனில், ஐந்தாவதாக ஒரு மொழி எனக்குக் கிடைக்கவில்லை’ என்று பதில் சொன்னார்.
எந்த மொழியையும் வெறுக்கவேண்டியதில்லை, பல மொழிகளைக் கற்பதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், அது அவரவர் விருப்பமாக இருக்கவேண்டும், அரசாங்கம் வலியத் திணிப்பதாக இருக்கக்கூடாது.
குறிப்புகள்:
- சான்று: Moved by Love : The Memoirs of Vinoba Bhave, Translated by : Marjorie Sykes
- கதவைத் தேடும் கலை: வினோபா
1 Comment