எழுதுவதற்கு எனக்கு மேசை, நாற்காலியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எங்கு உட்கார்ந்தும் எழுதுவேன். பேருந்தின் சின்னஞ்சிறிய இருக்கையில் லாப்டாப்பைப் பிரித்துவைத்து எழுதியதுண்டு, அதைவிடச் சற்று கூடுதல் சொகுசு மிகுந்த ரயில், விமான இருக்கைகளிலும் எழுதியிருக்கிறேன், இதுவரை கப்பலேறியதில்லை என்பதால் மிதந்துகொண்டு எழுதிய அனுபவம் இல்லை.
நான் எழுதும் இடத்தைச் சுற்றிச் சத்தம் வராமலிருந்தால் மகிழ்வேன். ஆனால், இரண்டு பெட்ரூம் வீட்டில் நான்கு பேர் வாழ்கிற நகரச்சூழலில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. ஆகவே, எப்பேர்ப்பட்ட சத்தத்திலும் எழுதப் பழகியாகிவிட்டது.
ஆனால், எழுதும் மென்பொருள் எனக்கு மிகவும் முக்கியம். Microsoft Wordல் என்னால் ஒருபோதும் எழுதமுடியாது. கூகுள் டாக்ஸும் அவ்வாறே. போல்ட், இட்டாலிக்ஸ், அன்டர்லைன் பொத்தான்களைப் பார்த்தாலே எனக்கு ஆகாது. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் Notepadதான். வெள்ளைத் திரையில் எழுத்துகள், இவற்றைத்தவிர எந்தப் பொத்தானும் அக்கம்பக்கத்தில் இருக்கக்கூடாது.
எழுதும்போது ஃபோனை அணைத்துவைப்பது, Mute செய்வது ஆகிய பழக்கங்கள் எனக்கு இல்லை. ஏனெனில், என்னை ஃபோனில் அழைக்கிறவர்கள் மிகக் குறைவு, நான் ஃபோனில் அழைக்கிறவர்கள் அதைவிடக் குறைவு. ஆகவே, ஃபோனை இருக்கிற இடத்தில் வைத்துவிட்டு எழுத ஆரம்பித்துவிடுவேன், யாராவது அழைத்தால் எடுத்துப் பேசிவிட்டுத் தொடர்வேன். அதனாலெல்லாம் எழுத்தோட்டம் தடைப்பட்டுவிடாது, மிஞ்சிப்போனால் ஒரு வரியையோ ஒரு பத்தியையோ திரும்ப எழுதுவேன், அவ்வளவுதான்.
ஒவ்வொரு வாரமும் என்னென்ன எழுதவேண்டும் என்று காகிதத்தில் பேனாவால் எழுதிக்கொள்வேன். கணினியில் உள்ள To Do பட்டியல்கள் எனக்கு ஒத்துவருவதில்லை. ஒவ்வொன்றாக எழுதியபின் அதைப் பேனாவால் குறுக்கே அடித்துத் தள்ளுவதுதான் எனக்குப் பரிசு.
வீட்டில் என்னுடைய எழுத்து மேசை மிகச்சிறியது, அதில் அங்குமிங்கும் வயர்கள் ஓடிக்கொண்டிருக்கும், லாப்டாப், மானிட்டர், கீபோர்ட், மவுசை வைத்தபிறகு வேறு எதற்கும் இடம் இருக்காது, எப்போதாவது ஒரு காஃபி, தேநீர்க் கோப்பை, கொஞ்சம் வேர்க்கடலை, மற்றபடி எழுதும்போது நொறுக்குத்தீனிகளில் விருப்பமில்லை, சுவரைப் பார்த்தபடி எழுதுவேன், முதுகுக்குப்பின்னால் நடப்பவை காதில் கேட்கும், ஆனால் மிகத் தேவை ஏற்பட்டாலன்றித் திரும்பிப்பார்க்கமாட்டேன்.
எழுதிக்கொண்டிருக்கும்போது என்னிடம் யாராவது எதையாவது கேட்டால், அந்தப் பத்தியை எழுதி முடிந்தபிறகுதான் பதில் சொல்வேன். இது மனைவிக்கும் மகள்களுக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டதால், ஒன்று, பொறுமையாக அங்கேயே காத்திருந்து அந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்பார்கள், அல்லது, பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று திரும்பிச் சென்றுவிடுவார்கள், ஒருபோதும் சலித்துக்கொண்டதில்லை. அவர்களுடைய இந்தச் சகிப்புணர்வு, பொறுமையால்தான் நான் எழுதுகிற அத்தனையும்!
அருமை ஸார்…🙂
ஒரு சந்தேகம். Notepad’ல் தமிழ் தட்டச்சு எனக்குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அவ்வப்போது எழுதுவேன் (கார்த்திக் ஶ்ரீநிவாஸ் எனும் பெயரில் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸில் 4 புத்தகங்கள்).. Gmail composer‘ல் தமிழ் language dongle பயன்படுத்துவேன். தங்களின் எழுதும் முறை ஆச்சர்யம் அளிக்கிறது, Notepad’ல் எப்படி தமிழில் எனக்கூறி உதவினால் நன்றாக இருக்கும்.
நன்றி, வணக்கம்.
விண்டோஸ் கணினியில் NHM Writer என்ற மென்பொருளைப் பயன்படுத்தி Notepadல் எழுதலாம்.
Mac கணினி என்றால் அதிலேயே தமிழ் தட்டச்சு வசதி இருக்கும்; “Input Source” என்று தேடுங்கள், தமிழைத் தேர்ந்தெடுங்கள்.